நவீன வாழ்க்கை..!

 


அண்மையில் மரணமடைந்த ஒரு உறவினர் வீட்டிற்கு உணவு எடுத்துச்செல்லவேண்டிய சூழல் வந்தது. நானும், மனைவியும் சென்றோம். உடனே திரும்ப திட்டம் போட்டோம். அது பலிக்கவில்லை. வெளியில் கதிரைபோட்டு, உட்கார வைத்துவிட்டார்கள்..!

சரி என்று உட்கார்ந்தால், அந்த வீட்டிலுள்ள வெளிநாட்டில் வசிக்கும் மனைவியின் உறவினரும், அவரது மகளும் பல நாட்களாக அங்கே நின்றார்கள். நான் அவரை விசாரித்தேன் ”இன்னும் போகவில்லையா என்று..”  அதற்கு அவர் போய்விட்டு, இன்று தான் திரும்ப வந்துள்ளார் என்றும், மகள் இங்கேயே நிற்கின்றாள் என்றும் கூறினார். சரி, மனைவி வந்தாரா..? எனக்கேட்டேன்.

தான் விவாகரத்துப் பெற்றுவிட்டேன் என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது..! அழகான அந்த உறவினர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் கரம்பிடித்து, எல்லோரும் வெளிநாடு ஒன்றில் நன்றாக வசிக்கின்றார்கள் என்றே நான் நினைத்தேன்.

நினைத்தது தவறு என்று, இன்று புரிந்துகொண்டேன்.  உறவினரின் தந்தை இறந்த நாள் அன்றே விவாகரத்தும் நடந்துள்ளது. உங்களின் விவாகரத்து, தந்தைக்குத் தெரியுமா..? எனக்கேட்கும் போது, தெரியும் என்றும், அதனால் தான் மரணம் முந்தியிருக்கலாம் என அவர் நம்புகின்றார்..!

பிள்ளை எப்படி ஏற்றுக்கொண்டாள்..? என்று கேட்க, பல வருடங்களாக பிரிந்தே வாழ்வதாகவும், ஊருக்கும், உலகிற்கும் அது தெரியாது என்றும்,  பிள்ளைக்கு ஒரு பக்குவம் வந்த பின்னர் பிரிவதால், அவரால் அதனை ஏற்றுக்கொள்ள முடிகின்றது என்றும் கூறினார்.

எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு பிள்ளை, தனது தாய், தந்தை பிரிவதை எப்படித் தாங்கிக்கொள்வது..?

மேலைத்தேய கலாசாரங்களில் இது ஒரு விடயம் கிடையாது. ஆனால் கீழைத்தேய கலாசாரம் இப்படிப்போவது, எதிர்காலம்  என்பதே வருங்காலச்சந்ததிக்கு கேள்விக்குறியாகின்றது..!

ஒரு விடயத்தைக் கவனமாக (Serious) அனுகுவதில் தற்போதைய இளையோர் முயல்வது இல்லை. “எடுத்தேன், கவிழ்த்தேன்..” என்கின்ற போக்கில் செயற்படுவது, வரும் சமூதாயம் ஆபத்திற்குள்  சிக்கப்போகின்றது என்பது எனது நிலைப்பாடு..!

அதனைப் பறைசாட்டும் நிகழ்வு ஒன்றும் இன்று அலுவலகத்தில் நடந்துள்ளது. அது, நீரழிவு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொள்ள,  மாணவர்களுக்குத் துறைத்தலைவர்களூடாக தகவலை அனுப்பி வைத்தேன். அத்துடன் சிற்றூண்டியும் வழங்குவதாகக் கூறியிருந்தேன்.  குறைந்த பட்சம் அந்தப்பகுதியில் இருப்பவர்கள் யாராவது போயிருப்பார்கள் என நினைத்து இருக்க, தொலைபேசியில், அழைப்பிதழ் தந்தவர், “ஒருவரும் நிகழ்வுக்கு வரவைில்லை..!” என கவலைப்பட்டு, எனக்குத்தெரிவித்தார்.

நானும் வருந்தினேன். ”என்ன பிள்ளைகள் இவர்கள்..?” என மனதிற்குள் நொந்துகொண்டேன்.

எனது நண்பர் கூட, அவுஸ்ரேலியாவில் மனைவியை விவாகரத்து பண்ணிவிட்டு, வேறு பெண் பார்த்துக்கொண்டிருக்கின்றார். அவரது மகனும் விமானம் தொடர்பான பொறியியல் பட்டத்தைப் படிக்கின்றார்.

மகளிடம் இந்தவிடயத்தைச் சொல்ல அவள் சிரித்துக்கொண்டு, இப்ப “இப்படித்தான் அப்பா..!” எனச்சொன்னாள்.

வருங்காலம் எப்படியிருக்கப் போகின்றது என்பதை நினைக்க வேதனையாக இருக்கின்றது. இறைவன் தான், அனைவரையும் நல்லவழியில்  காக்க வேண்டும். மனத்தில், அன்பும், விட்டுக்கொடுப்பும், உறவுகளை அரவணைக்கும் பங்கும் ஓங்க, இயற்கை அனுமதிக்க வேண்டும்.

இவை இல்லை என்றால் “நாறும் வாழ்க்கையாக நவீன வாழ்க்கை..!” இருக்கப்போவதை நாமும் பார்த்து, வேதனைப்படவேண்டியிருக்கும்.

 


ஆ.கெ.கோகிலன்

28-11-2023

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!