தலைவர் மகள்..!

 


அண்மையில் மாவீரர் தினம் வந்தது. இம்முறை யாழ்ப்பாணத்திலும், தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் எங்கும் மாவீரர் நாளை அனுஷ்டிக்க  அரசு மறைமுக ஆதரவை வழங்கியது.

கடந்த வருடம் பொருளாதாரக்கஷ்டத்தில் நாடு பட்ட பாடு அனைவரும் அறிந்ததே..! அந்தக்கஷ்டத்தில் இருந்து முற்றாக மீள இன்னும் சில வருடங்கள் எடுத்தாலும், தற்போது ஓரளவிற்கு மக்களால் சமாளித்து வாழ முடிகின்றது..!

பெற்றோலுக்கு வரிசையில் நிற்கவேண்டிய நிலை மாறியுள்ளது..! QR Code என்ற முறையும் மறைந்துவிட்டது..! விலைகள் 3 மடங்காகக் கூடியுள்ளது என்பது  உண்மை என்றாலும், கஞ்சியைக் குடித்தாவது வாழ முடிகின்றது என்பதே பெரிய நிம்மதி..!

இந்த சூழலில் இந்திய ஊடகங்கள், பழைய தமிழ் மக்களின் போராட்ட தலைவர் வருகின்றார்..! அவரது மகள் வருகின்றார்..! மாவீரர் நாள் உரையாற்றப்போகின்றார் என்றெல்லாம் பீடிகை போட்டார்கள்..!

மக்களும் அது உண்மையாக இருக்குமா..? என்ற எண்ணத்தில் ஒரு சாராரும், அவர் இனி வரவே மாட்டார் என்ற நம்பிக்கையில் இன்னோரு சாராரும் இருக்கின்றார்கள்..! இதற்கு நடுவே, வந்தால் என்ன..? வராவிட்டால் என்ன..?  என எண்ணும்  மூன்றாவது ஒரு சாராரும் இருக்கத்தான்  செய்கின்றார்கள்..!

மாவீரர் நாள் வந்தது..! தலைவர் வரவில்லை. ஆனால் தலைவரின் மகள் யூரியூப்பில் வந்து உரையாற்றினார்..! உரையைப் பார்த்தால் தலைவரைப் போலவே இருந்தது. தோற்றமும் தலைவருடன் ஒத்துப்போனது. இருந்தாலும் இது உண்மையான தலைவரின் மகளா..? என்ற கேள்வி, பலரிடம் எழாமல் இல்லை..!

இந்தப்பெண் தொடர்பாக பல விடயங்கள் கதைக்கப்பட்டன. இந்தப்பெண்ணைப் பேச வைத்தது “சேரமான்” என்கின்ற கிருபாணந்தன் என்று சில யூரியூப்புகளில் கதைகள் வந்தன. சரி யார் என்று தேடிப்பார்த்தால், எனக்கு ஓரே ஆச்சரியமாக இருந்தது..!

நான் பாடசாலையில் படிக்கும் போதும், பின்னர் வவுனியா பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கும்போதும் இருந்த எனது நண்பரின் தோற்றத்தை, அது ஒத்து இருந்தது..! அவர் தொடர்பான தகவல் எனக்கு கிடைக்கவில்லை. 1995 மற்றும்1996 காலங்களில் அவருடன் தொடர்பு இருந்தது. அந்த நேரத்தில், அவருக்காக ஒரு பரீட்சையை நானே வைத்தேன்..! அந்தப்பரீட்சை வீனாக்களை சொல்லாமல், பல நாட்கள் அவருக்கு படிப்பித்தேன்..! என்னுடைய வயதை ஒத்த, ஒரு நண்பருக்கு, நானே வினாத்தாளும் தயாரித்து, அதே நேரம் அவர் அதில் சித்தி எய்வதற்காக படிப்பித்தும் வரக்கூடிய சூழல் வந்ததை இப்போதும் ஆச்சரியமாகப் பார்க்கின்றேன்.

இன்று யூரியூப்பில் அடிபடும்  பேரோடு அந்த நபரும் தொடர்பு பட்டுள்ளாரா அல்லது அவர் வேறு நபரா என்ற சந் தேகம் இருப்பதால் மேற்கொண்டு  அதனைக் கிழறவில்லை..!  தமிழர்கள் என்றால் ஏதோவோர் விதத்தில் போராளிகளுடன் தொடர்புபட்டிருப்பதைத் தவிர்க்க அல்லது தடுக்க முடியாது..!

ஒரே வீட்டு உறவுகளுக்குள்ளேயே வெவ்வேறு இயக்கங்களுடன் தொடர்புபட்ட மனிதர்களையும், உறவுகளுக்குள்ளேயே சண்டைபோட்ட தருணங்களையும் மறக்க முடியாது..! ரணக்காயங்கள் அவை..! ஒரே நோக்கம் என்று சொல்லி, தமக்குள் ஒரு புரிந்துணர்வு இல்லாமல் அடிபட்டு, அல்லோலகல்லோலப்பட்டு, அலைந்த எம்முறவுகளின் குணங்களை என்னால் மன்னிக்கவே  முடியவில்லை. எதிரிகளை விட துரோகிகள் ஆபத்தானவர்கள் என்பதை உணர்த்தியது எமது உள்நாட்டு யுத்தம்..!

யுத்தம் கடந்து, கொரோனா கண்டு வந்த, நாமெல்லோரும் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே..! இனியாவது, உண்மைகளையும், எமது இயல்புகளையும் புரிந்து, நல்ல வழியில் பயணிக்க முயலலாம்.

 

ஆ.கெ.கோகிலன்

02-12-2023.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!