”முகாமைத்துவ நேரம்..!”
இன்று சனிக்கிழமை.
நேற்று இரவு வீடு வந்ததே 11.00 மணி தாண்டியிருக்கும். காலை போட்ட உடுப்பைக்கழட்ட
13 மணித்தியாலங்கள் தாண்டிவிட்டது..! ஒரே களைப்பு..! அப்படியே பாயைப் போட்டு, உறங்கச்சென்றேன்.
எனது பாயில் படுத்து உறங்கினால் தான் எனக்கு நிம்மதியான நித்திரை வரும்..! கட்டில்கள்
எல்லாம் சும்மா பெருக்குத் தான் இருக்கின்றன..! படுப்பது மிக மிகக் குறைவு..!
இரவு 12.00 இற்குக்கிட்ட படுத்தாலும், அடுத்தநாள் அதிகாலை
3.00 மணிக்கே எழுந்துவிட்டேன். தலைமையகத்தில் இருந்து வந்தவர்களை வலம்புரியின் கீழுள்ள
துளசி என்ற விடுதியில் தங்க வைத்திருந்தேன். நுளம்புகள் காரணமாக விடுதி மாற்றவேண்டிய
தேவை ஏற்பட்டது. அவர்கள் நித்திரை கொண்டார்களோ தெரியவில்லை..? நான் விரைவாக எழுந்ததால்,
விரைவாகக் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, மிக விரைவாகவே காலை 7.30 மணிக்கு வலம்புரியில்
நிற்கக்கூடியதாகச் சென்றேன். அவர்களும் சிறிது நேரத்தில் வந்தார்கள். காலை உணவு அனைவருக்கும்
அங்கேயே வழங்கினேன். பின்னர் அலுவலகம் வந்து, கல்வி சாரா மற்றும் போதனாசிரியர்களுக்கான
கூட்டத்தை நடாத்திவிட்டு, முகாமைத்துவ நேரம் என்னும் இலத்திரனியல் புத்தகம் வெளியிடும் மண்டபத்திற்குச் சென்றேன். அங்கு எம்மை
மாலைபோட்டு வரவேற்றார்கள். பின்னர், மங்கல விளக்கினை ஏற்றியதுடன், தொடர்ந்து வந்த நிகழ்வுகளில்
கலந்துகொண்டேன்.
பல வித்தியாசமான நிகழ்வுகள் நடந்தன. புத்தகத்திற்கு விமர்சனம்
செய்ய வந்தவர் ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முன்னர் என்னுடன் வேலை செய்த பெண் பேராசிரியர்
ஒருவர்..! அந்நேரம் எனது உற்ற நண்பராக இருந்தார்..! அவரது திருமணத்திலும் கலந்துகொண்டேன்
எனநினைக்கின்றேன். மிகவும் நல்லவர். கண்டிப்பானவர். எனக்கு அக்கா போன்றவர்.
அவர் புத்தக விமர்சனத்தில், பல குற்றங்களைச் சொல்லி, எம்மைத்
திருத்தச் சொன்னார். அவரது சொற்களை காதில் வாங்கி, மாணவர்களையும், எமது ஊழியர்களையும்,
அந்த புத்தகத்தில் விட்ட தவறுகளைத் திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டேன்.
அதன் பின்னர் எமது உரைகள் இருந்தன. எனது நண்பரின் உரையில்
முகாமையாளருக்கு இருக்கவேண்டிய பண்பு பற்றிக்கூறினார்..! அதற்கு உதாரணமாக சிங்கம் போல்
இருக்க வேண்டும் என்றார். நான் அவருக்கு முரணாக
அன்பு செலுத்தும் தாய் போல் இருக்க வேண்டும் என்ற வகையில் பேசினேன். எல்லோரையும் மதிக்கும்
மனநிலை கொண்ட தொழிலையே செய்கின்றேன். அன்பில் ஏற்பட்ட பாதிப்பும், மனங்களில் ஏற்பட்ட
வன்ம உணர்வுகளுமே, தற்போதைய உலகின் கஷ்டமான நிலைக்கு காரணம் எனவும், எல்லோரும் புரிந்து செயற்பட வேண்டும் என்றும், பயமுறுத்தி
முகாமை செய்வதைவிட அன்பால் விட்டுக்கொடுத்து முகாமை செய்வது மேல் என்று சொல்லி முடித்தேன்.
பணிப்பாளர் நாயகமும் எனது பேச்சைப் பாராட்டினார்..!
பின்னர், கடும் மழையில் அலுவலகம் வந்து, உணவுகளைப் போதியாக்கிக்கொண்டு,
அவர்கள் கேட்ட இடத்திற்கு கூட்டிச்சென்றேன். அங்கே அவர்கள் கருவாடு வாங்கினார்கள்.
ஆனால் முந்திரி வங்க முடியவில்லை. சீசன் மாறிவிட்டது
என்று அந்த இடத்தில் விசாரிக்கும்போது அறிந்துகொண்டேன்.
பணிப்பாளர் நாயகத்தையும் அவருடன் வந்தவர்களையும் வீட்டிற்கு
அழைத்தேன். அவர்கள் மறுத்தார்கள். பின்னர், அங்கிருந்து கைதடி பாதையூடாக திரும்பிச்
செல்ல தொடங்கினார்கள். நானும் வீடுவந்து நித்திரைக்குச் சென்றேன். கடும் மழை பொழிந்துகொண்டிருந்ததாலும், அணைக்கட்டுக்களின் வான்கதவு திறந்த படியாலும் வீதிகளில்
வெள்ளம் நிற்பதாகச் சேதிகள் வந்தன. அதனால், அவர்களின் நிலைகளை இடையில் அறிந்தேன்.
பின்னர் சரிகமப பார்த்துவிட்டுப்படுத்தேன். மனம் நிறைவாக
இருந்தது.
ஆ.கெ.கோகிலன்
17-12-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக