எங்கோ இருக்க வேண்டியவர்..?

 



அலுவலகத்தில் இன்று நிறைய முறைப்பாடுகள் எமது கணக்காளர் மீது வந்தது..!  காலையே தனது கால் வருத்தத்திற்காக மருத்துவமனை சென்றதால் அவருடன் கதைக்க முடியவில்லை. பல முறை போன் எடுத்தும் பதில் இல்லை.

நிறுவனத் தலைவர் என்றால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்க  வேண்டும் அல்லது வழங்க முடியாததற்கான காரணத்தையாவது சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும்.

இரண்டும் செய்யமுடியவில்லை என்றால் அங்கு வேலைசெய்து பயனில்லை. வேறெங்காவது மாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும்.  இது தான் என் முடிவு.

இவ்வாறான மனச்சுமைகளுடன் போனைப்பார்க்க, எனது சிறுவயது நண்பர் ஒருவரின் மிஸ்கோல் இருந்தது..! எடுத்தேன். மறுமுனையில் அவர் இன்னும் அரை மணிநேரத்தில் உங்குவருகின்றேன், என்றார். முக்கிய விடயம் ஒன்று கதைக்க வேண்டும்.  “வரலாமா..?” எனக்கேட்டார். நானும் உடனே தாராளமாக வரலாம் என்றுவிட்டேன்.  பின்னர் வீட்டில் சில மாற்றங்களைச் செய்து, புதிய சாரம் மற்றும் ரீசேட்டுக்கு மாறி, ஆவலுடன் காத்திருந்தேன். நண்பர் மாத்திரம் வரவில்லை..! அவருடன் மனைவியும் அவரது மூத்த மகளும் வந்திருந்தார்கள்..! அப்போது நினைத்தேன்..”ஏதோ படிப்புத் தொடர்பாக, கதைக்க வந்துள்ளார்கள் என்று..!”

ஆனால் அவர் வந்தவிடயம் வேறு..! மகளைக்காட்டி இவரைத் தெரியுமா..?  என்றார். நான் தெரியாது என்றேன். இவர் உங்கள் நிறுவனத்தில் ஒரு கற்கைநெறி பயில்கின்றார். தற்போது வெளிநாடு போவதற்கான ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அவரை படிப்பில் இருந்து விடுவிக்கவே வந்ததாகக்கூறினார். இதற்கு ஏன் வரவேண்டும்..? அண்மை நாட்களில் பலர் இவ்வாறு செய்கின்றார்கள். நானும் அவர்களை மறிப்பதில்லை. ஆனால் சில உலக உண்மைகளைக் கூறுவேன்.  எனது கருத்தால் மனம்மாறியதாக ஒருவரையும் பார்க்கவில்லை.

இங்கு மகளுக்குப் படிக்க விருப்பம். ஆனால் தந்தைக்கு, தனது உடல் நிலையும், தற்போதைய பொருளாதார நிலையும் மிகுந்த பயத்தைக்கொடுத்துள்ளது..! எங்காவது வெளிநாடு சென்றால் தான் தப்பலாம் என்ற நினைப்பில் இருக்கின்றார். எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். பயனில்லை. பின்னர், அவரது முடிவுக்குச் சென்றுவிட்டேன். கற்றல் என்பது விரும்பிச்செய்ய வேண்டியது. அழுத்தங்களால் அதனை வெற்றிகரமாகச் செய்ய முடியாது எனச்சொல்லி, ஒரு சிறுதொகைத் தண்டப்பணம் செலுத்தவேண்டிவரும் என்பதையும் சொன்னேன். ஏற்றுக்கொண்டார்கள்.

அந்தபெண் பிள்ளையும்   பல கேடயங்களையும், பரிசில்களையும் விளையாட்டிற்காப் பெற்றவர்..! மாகாணத்தில் முதலிடம் பெற்றவர்..! படிப்பதில் ஆர்வம் கொண்டவர்..! சூழல் இவ்வாறு அமைந்ததையிட்டு வருந்தினாலும், தமது குடும்பத்தின் நன்மைக்கு என்பதை உணர்ந்து, தகப்பனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் பல பொதுவான விடயங்களைக் கதைக்கும் போது தான், எனது நண்பரின் பழைய சாகசங்களும், திறமையும், அவரது மனைவியின் திறமையும் புரிந்தது..! சின்ன வயதிலே வெளிநாடு ஒன்றிலும் ஜந்து வருடங்களுக்கு மேலாக இருந்தவர்.  அங்கு ஒரு கேபிள் கார் விபத்தில் சிக்கி உயிர்தப்பியவர். பின்னர் நாட்டிற்கு வந்து,

பெற்றோருக்காகவும்,

தனது நாட்டிற்காகவும் இங்கே இருந்துள்ளார்.

ஏறக்குறைய 40 வருடங்களாக, இருவரும் சந்திக்ககூடிய சூழல்  அமையவில்லை..! இரண்டாவது மகளின் சாமத்திய வீட்டிலே அவரைக்கண்டேன்..!

எங்கோ இருக்க வேண்டியவர், காலம் செய்த கோலத்தால் இந்த நிலைக்கு வந்துள்ளார்..!

அதன் பிறகு, எனது நண்பன் மேல் அதீத மதிப்பும், அன்பும் கூடியது..!

அதே போல் அவரது மனைவிமேலும் வந்தது..!

சின்ன வயதில் மிகவும் அழகான தோற்றத்தைக்கொண்டவர், பல விபத்துக்களால் முகத்தில் பல தழும்புகளும், சொட்டைத்தலையும் வந்துவிட்டது..!

நானும் இந்திய அகதி முகாமில் பல பாடங்களைக் கற்றேன்..! அதுபோல், அவரும் பல பாடங்களைக் கற்றும், பலருக்குப் போதித்தும் வந்துள்ளார்.

“அனுபவச்சேகரிப்பே வாழ்க்கை..!”

ஆ.கெ.கோகிலன்

24-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!