தையல் மெசின்..!

 



பொருளாதாரக் கஷ்டம் என்பது தற்போது நாட்டில் தலைவிரித்து ஆடுகின்றது. சிலர் தமது சாமர்த்திய வாழ்க்கை முறையால் அதனைச் சமாளிக்கின்றார்கள். சிலருக்கு வெளிநாட்டு உறவுகள் உதவுகின்றார்கள். சிலர் இன்னும் கடின முயற்சியைப் போட்டு, அதிகமாக உழைக்கின்றார்கள்.  சிலர் நாட்டில் வாழவே முடியாது என்று நாட்டை விட்டே ஓடுகின்றார்கள். சிலர் வாழ்க்கையே வெறுத்து, உலகை விட்டே செல்கின்றார்கள். இவ்வாறாக மக்களின் நிலைகள் மாறுபட்டு இருக்க, இயற்கையும் தன்பாட்டிற்கு சில பாடங்களைக் கொடுக்கின்றது.

நான்  இந்தச்சூழலைக் கடக்க எளிமையான வாழ்க்கை முறையே விரும்புகின்றேன்.

ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முன்னர், நான் இந்தியா செல்லும்போது கல்வித்துறையில் செல்லும் நோக்கம் குறைந்து, ஏதாவது வேலைசெய்ய வேண்டும் என்ற முனைப்பே வந்தது.

அதனால் அந்தச் சமயத்தில் Welding, Fitting & Spray Painting என்ற கற்கை நெறியை ஆங்கிலமொழியூடாகப் படித்தேன். படித்ததோடு சரி, இன்றுவரை அதனைப் பயன்படுத்தவில்லை..!

இதேபோல் திருகோணமலையில் இருக்கும்போது, கையில் ஒரு பட்டம் இருந்தாலும் அந்நேரம் வேலைகிடைக்கவில்லை..! பஸ் மற்றும் வான்னிற்கு ட்ரைவிங் படித்து லைசன்ஸூம் எடுத்தேன். அத்தோடு சரி..!  பின்னர் பஸ்ஸூக்கும் வானுக்கும் எடுத்த லைசன்ஸை நீக்கி, காருக்கும் மோட்டார் சைக்கிளுக்குமாக மாற்றிக்கொண்டேன்.  அந்த நேரத்தில் பஸ் லைசன்ஸை புதுப்பிக்க ஒவ்வொரு வருடமும் மருத்துவச் சான்றிதழ் எடுக்கவேண்டும். அது அப்போது எனக்கு மேலதீக வேலையாகவும், செலவாகவும் இருந்தது..!

யாழ்ப்பாணம் வந்த பின்னர், ஒரு ரியூட்டரி தொடங்க எல்லா ஏற்பாடுகளும் செய்தேன். இறுதியில் தொடர்ந்து எமது நிறுவனத்தில் படிப்பிக்கவேண்டிய சூழல் வந்ததால், அதனைத் தவிர்த்தேன்.

இவ்வாறு ஏதாவது வேலைசெய்யலாம் எனநினைத்தாலும், இயற்கை அந்தத் திசையில் விடவில்லை. இன்னோர் திசையில் கூட்டிச்செல்கின்றது.

சிறுவயதில், எனது வீட்டிலும் பொருளாதார சுமை பெரும் சுமையாக மாறியது. கஷ்டத்தைக் குறைக்கவென்று  வேலையைவிட்டு வெளிநாடு புறப்பட்ட அப்பா, நடுவில் நின்று அவதிப்பட்டுள்ளார்..! அம்மாவே முழுச்சுமையையும் தாங்கினார். நானும் என்னால் இயன்றவரை அம்மாவின் சுமையை குறைக்க முனைந்தேன். உடுக்க உடுப்புக்களே இல்லாத சமயத்தில், பழைய வேலையில் அப்பாவிற்கு கொடுத்த துணியில் எனக்கான கால்சட்டையை நானே தைத்தேன்..! அம்மாவின் தையல்மெசினில் நானும் உட்காருவேன். ஏதாவது சிறிய பிழைகள் மெசினில் வந்தால் நானே திருத்தி அம்மாவிற்கு உதவுவேன். தையல்மெசினில் அவ்வளவு பரீட்சயம் எனக்கு சின்ன வயதிலே வந்துவிட்டது. அதேபோல் எனது மனைவி வீட்டில் மிகவும் வசதிகள் கூடிய தையல்மெசின் அவர் பிறந்தபோதே வந்துவிட்டது. அவர் அதில் அதிகம் மெனக்கெடுவது கிடையாது.    தைத்துப்போடும் பழக்கமும் குறைவு..! ஆனால் இன்னும் ஊசியும் நூலும் பயன்படுத்துவதுண்டு..!

சில வாரங்களுக்கு முன்னர் அந்தத்தையல் மெசினைக்கேட்டேன். அது பயன்படுத்தாமல், இறுகிவிட்டது. கிட்டத்தட்ட பல வருடங்களாகப் பயன்படுத்தவில்லை. பழைய எண்ணெய் போட்டுத்துடைத்து, திருத்த முயற்சி செய்தேன். சில Parts வாங்கவேண்டிய தேவை இருந்தது. அவை தற்போது சந்தையில் இருக்கின்றதா என்பதே தெரியவில்லை..! பின்னர் எமது ஊரிலுள்ள ஒரு கடையில் திருத்தக்கூடிய வசதி இருந்தது. இன்று அந்தக்கடையில் கொடுத்து, அந்த தையல்மெசினை திருத்தி, ஒரு தலையணை உறையை எனக்குத் தைத்தேன். பின்னர் மகள்களிடம் அதனைக்கொடுத்து,  பழகச்சொன்னேன். இன்றைய காலத்தில் வாழ்க்கைக்கான கல்வி என்பது மிக மிக முக்கியம்.  அவ்வாறான ஆற்றல் இருந்தால், எந்தச் சவாலான சூழலையும் சமாளித்து, மீளலாம். நாட்டில், தற்போது இப்படியான திறன்கள் இருந்தால்,  வெளிச்செல்லும் பணவோட்டத்தைக்குறைத்து, வரிசெலுத்தும் சூழலையும் தவிர்த்து, சிக்கனமாகவும் நிறைவாகவும் வாழமுடியும். நாடு பொருளாதார வளம் பெற்றபின்னர், எவ்வாறும் நாம் விரும்பியபடி வாழமுடியும். ஆனால் தற்போது மிகக்கவனத்துடன் வாழவேண்டும். இது நாட்டுக்கல்ல..! இந்த உலகத்திற்கே பொருந்தும்.

விழுவதற்கான பயம் தரையில் படுப்பவனுக்கு குறைவு..! கட்டிலில் படுப்பவனுக்குக் கூட..!

 

ஆ.கெ.கோகிலன்

02-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!