அகதி முகாம் உறவு..!

 



எனது பேஸ் புக்கில் ஒரு பெண்ணின் Friend Request  இருந்தது..! பொதுவாக நான் ஒருவருடைய  Request ஐயும் Accept  பண்ணுவதில்லை. என்னுடைய Account இல் மிகச்சொற்பமான நபர்களே இருக்கின்றார்கள்.  அந்தப்பெண்ணின் பெயரும் முகமும் பரீட்சயமானவர் என்பதை உணர்த்தியது.  40ஐத் தாண்டிய வயதுடைய பெண் என்பதால் Accept  பண்ணிவிட்டேன். பின்னர் ஏதோ ஒரு  Message உம் அனுப்பி, நீங்கள் அவர் தானா..? என வினாவினேன். அவரும் “ஓம்” சொல்லி, நேரடியாகக் கதைக்க வரச்சொன்னார். அவர் வீடியோவை “On”  பண்ணி   தனது தோற்றத்தையும், அவருடைய பிள்ளைகளின் தோற்றத்தையும் காட்டினார்..! என்னையும் காட்டச்சொன்னார். நான் வெறும், மேலோடு இருந்ததால் இப்போது வேண்டாம் இன்னொரு நாள் என்னையும், எனது குடும்பத்தாரையும் காட்டுகின்றேன் என்று சொல்லி, அவருடைய வீடியோ கோலை “Off” பண்ணச்சொல்லிவிட்டு, தனிய Audio வில் கதைத்தேன். இரவு 8.00மணிக்கு தொடங்கிய பேச்சு நடு இரவு 12.00 ஐ தாண்டிப்போய்கொண்டிருந்தது. அவரும் விடுவதாக இல்லை. என்னாலும் cut பண்ணி வரமுடியவில்லை. ஒருவாறு 12.20 நானே முடித்துக்கொண்டேன்.

அவ்வளவு நேரம் கதைப்பதற்கு என்ன இருந்தது..?

பல பேருக்கு தெரியாது, எனது வாழ்க்கையின் நகர்வுகள் நான் நினைத்தது போல் அமைவதில்லை..! அது எப்படிப் போகுதோ அப்படியே நானும் போகின்றேன்.  இதுவரை வந்ததில் எவ்வளவு துன்பங்கள், கஷ்டங்கள் வந்தாலும் இறைவனின் அருளாலும் இயற்கையின் அனுசரணையாலும் நிறைவாகவே இருப்பதாக உணர்கின்றேன். தேவைகளை அதிகரிக்க விரும்புவதில்லை. இருப்பதை வைத்து வாழவும், இயன்ற முயற்சியை செய்யவுமே நான் என்னைத் தயார்படுத்திக்கொண்டு இருக்கின்றேன்.

1990களில் இரண்டு முறை உயர்தரம் எழுதிவிட்டு, 3ஆம் முறை முயல, பரீட்சை எழுதும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. முதல் முறை எழுதிய  பரீட்சையின் முடிவுக்கு ஏற்ப   Physical Science  தாமதித்துக்கிடைக்க, அதற்கு ஒப்பான ஒரு துறையைத் தெரிந்து  இந்தியாவில் படித்தேன். அது தான் B.Sc(Mathematics)..!  கொஞ்சம் கஷ்டப்பட்டும், இஷ்டப்பட்டும் படித்ததால் முதல் வகுப்பில் அதனை முடிக்க முடிந்தது. பின்னால் வரும் வாழ்க்கைக்கு அந்தப்படிப்பு ஒரு பிள்ளையார் சுழி போட வழி வகுத்தது..!  இந்தியாவிலுள்ள மதுரை என்ற கோயில் நகரத்தில் இருக்கின்ற ஒரு சிறிய கிராமமான உச்சப்பட்டி என்ற இடத்தில் இருந்து தான்  இந்தப்படிப்பை படித்து முடித்தேன். அப்போது என்னுடன் இருந்த இலங்கை உறவுகளின் எண்ணிக்கை 4000 பேர் இருப்பார்கள்..! ஏதோவோர் விதத்தில் எல்லோருடனும் தொடர்பு பட்டிருந்தேன். கோயில், தேவாலயம் என்பவற்றைக் கட்டி அவற்றிற்கும் சென்று வந்தேன். சாயி, ஐயப்பன் பஜன் செய்து வந்தேன். சிலம்பம் படித்தேன். வெல்டிங் படித்தேன், ஜிம் போய் வந்தேன். டைப்பிங் படித்தேன். பழக்கினேன். இவற்றிற்கு மேலாக இலவசமாக பாடங்களும் படிப்பித்தேன்.

இவ்வாறான செயல்களால் பல அறிமுகங்கள் இருந்தன..! நான் 1990 இல் போகும் போது 14 வயதுச் சிறுமியாக இருந்த ஒரு பெண், நான் படிப்பு முடித்து முகாம் வரும்போது குமரியாக, பேரழகியாக இருந்தார்.  அடிக்கடி சந்தித்துக்கதைப்பதுண்டு. எங்களுக்குள் ஏதோவோர் பிணைப்பு இருந்தது. தங்கையா அல்லது வேறா என்று இன்னும் புரியவில்லை..!

சில மாதங்களில் அவர்களை எல்லாம் பிரிந்து இலங்கைவந்துவிட்டேன். அந்தச்சமயம் ஒரு சின்ன மனத்தாக்கம் இருந்தது..! ஆனால் ஒன்றையும் நான் வெளிப்படுத்தவில்லை. அன்பு மட்டும் இருந்தது. அக்கறை இருந்தது. சந்திக்கும் சமயங்களில் ஒரு மகிழ்ச்சி இருந்தது. இதுவும் ஒரு வித பந்தம். அகதிமுகாம் பந்தம்..!  இப்போது ஒரு தங்கையாக அவரைக் கருதமுடியும். இருவரும் திருமணம் முடித்துள்ளோம். இருவருக்கும் பிள்ளைகள் உண்டு.

அவரது கணவரும் திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்தவர். தம்பலகாமம் என்பது அவரது சொந்த இடம்..! நானும் உவர்மலையில் இருந்துள்ளேன். இருவருக்கும் இரு பெண் பிள்ளைகள்..! 

நான்  அதிகம் கதைப்பதுண்டு. அவர் அப்படிக் கதைப்பதில்லை. புன்முறுவல் தான் செய்வார்.

ஆனால் இன்று நிறையக் கதைத்தார். தனது வாழ்க்கைக்கட்டங்கள் பற்றிச்சொன்னார். இலண்டனில் இருந்தாலும் தன்நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றார். தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்றார். கணவன், பிள்ளைகள் மீது அதிக அக்கறையுடன் இருக்கின்றார். மத மார்க்கங்களிலும் கவனம் செலுத்துகின்றார்.  நான் இளம் குமரியாகப் பார்த்த ஒரு பெண், குடும்பத் தலைவியாகி, குடும்பத்தை வழிநடத்தும் தன்நம்பிக்கையும், இறைநம்பிக்கையும் எனக்கே ஆச்சரியமாக உள்ளது. அதுமாத்திரமன்றி, இன்னும் அந்த அகதி முகாமுடன் தொடர்பு வைத்துள்ளார்..! அவருடைய சகோதரங்களுக்கு உதவுகின்றார். ஒரு பெண்ணால் எதையும் செய்ய முடியும் என்ற தன்நம்பிக்கைக்கு உதாரணமாகத் திகழ்கின்றார்.

வெட்கத்துடன் இருந்த பெண், விபரமாகச் செயற்படும்போது என்னைப்போன்ற பெண் பிள்ளைகளின் தந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்றது..!

துணிவே துணை..! அன்பே அறம்..! உதவுவதே வாழ்க்கை..!

 

ஆ.கெ.கோகிலன்

24-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!