லீவு..!

 



பொதுவாக நான் லீவு எடுப்பது குறைவு.

இறுதியாகத் தொடர்ந்து லீவு தானே எடுக்கப்போகின்றோம். அதனால் இப்போது இயன்றவரை எல்லா நாளும் வேலைசெய்ய வேண்டும் என்று நினைப்பேன்.

கடந்த இரண்டு கிழமை தொடர் வேலைகளாலும், மழையாலும் பல வீட்டு வேலைகள் இழுபட்டுக்கொண்டிருந்தன. நான் வீட்டிலும் எனது வேலைகளை யாரிடமும் கொடுக்க விரும்புவதில்லை.  அதேபோல் அவரவர்கள் அவர்களது வேலைகளைச் சரியாகச் செய்யவேண்டும் என்று நினைப்பவன். இப்போது எனது வேலைகளையே ஒழுங்காகச் செய்ய முடியவில்லை..!

அதனால் இன்று, தனிப்பட்ட காரணத்தின் நிமித்தம் ஒருவரை மாற்று ஏற்பாடாகச் செய்துவிட்டு லீவு எடுத்து நிறைய வேலைகள் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டேன். குறிப்பாக அம்மாவீட்டிற்கு போகவேண்டும் என்றும், வங்கி அலுவல்கள் பார்க்க வேண்டும் என்றும் நினைத்தேன். 

காலை வானமும் அதற்கு ஒத்துவருவதாக இருந்தது. ஒருவாறு உடுப்புக்களை வோசிங்மெசின் உதவியோடு தோய்தேன். முன்பக்கம் மழையால் அசிங்கமாக இருந்தது..! முற்றத்தில் நின்ற நெல்லிமரம் நன்றாகக் காய்த்து வீதியில் போறவர்களை கவர்ந்து இழுத்தது..! அவர்களுக்கு, அம்மரத்தைத் தானமாக வழங்கிவிட்டு, நான் சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்தேன்.

இன்று அலுவலகத்திலும் சிரமதானம் செய்ய மாவட்ட அரச அதிபர் ஆணையிட்டதால், ஊழியர்களிடம் அதனைச் செய்யப் பணித்ததுடன் டெங்கு நுளம்பு பரம்பலைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக்கொண்டு, வீட்டிலும் அதனைக்கடைப்பிடித்தேன்.

சில நாட்களுக்கு முன்னர் செய்த கொலைகள் போதாது என்று இன்னும் பல மசுக்குட்டிகள் மரங்களில் மிஞ்சி இருந்தன..! வேறு என்ன செய்ய..? மீண்டும் கொலைகாரனாக மாறி, மிகுதியாக இருந்த அனைத்தையும் எரித்துக்கொண்டு, அநியாயத்தை அழித்த இராமன் மாதிரி பெருமிதத்துடன் இருந்தேன்.

கொடுமைகள் செய்வது இன்று நேற்று அல்ல..! சின்ன வயதிலிருந்தே தொடர்கின்றது. இவ்வாறு கொலைகளைச் செய்து போட்டு எப்படி நல்லவன் வேஷத்தில் வாழ்வது..? புரியவில்லை..!  அதைவிட கெட்டவனாகவே இருந்துவிட்டுப்போவது உண்மைபோல்  தோன்றுகின்றது..!

எனது வீடு நான் இல்லை என்றால், அநேகமாகப் பூட்டித்தான் இருக்கும். ஆனால் அங்கு பலர் வசிக்கின்றார்கள். நாய், பூனை, ஈக்கள், அட்டைகள், கரப்பான் பூச்சிகள், எலிகள், அணில்கள், புறாக்கள், காகங்கள், மரநாய்கள், நுளம்புகள், கொசுக்கள், எறும்புகள் இன்னும் பெயர் தெரியாத பல உயிரினங்கள் வசிக்கின்றன. அவை ஒவ்வொரு நாளும் என்னைப் பார்த்து பயந்து தான் அங்கே வாழ்கின்றன. என் கண்ணில் பட்டால் சரி..! அவ்வளவு தான் அவர்களின் வாழ்க்கை..!

இறைவன் எவ்வளவு கொடுமையான மனத்தை எனக்கு கொடுத்துள்ளார் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருக்கும்.  நான் இவற்றைத் தின்பதற்காகக் கொல்லவில்லை. அவற்றால் வரும் தொல்லைகளுக்காகவே கொல்லவோ அல்லது துரத்தவோ முனைவேன்.

எனது வீட்டு CCTV இற்கான இணைப்புப்பெட்டியின் மேல் ஒரு UPS இருக்கின்றது. அது உயர்வாக இருப்பதால், அதைச்சுற்றி இருப்பது ஒன்றும் தெரிவது இல்லை. நேற்றுமாலை அதன் கீழ் தும்புகள் காணப்பட்டன. பின்னர் தெரிந்தது அணில் கூடு கட்டியுள்ளது என்பதை..! அதுமாத்திரமன்றி, வீட்டின் Hall இற்குள் அழுக்குகளும் விழுந்துகொண்டிருந்தன. வேறுவழியில்லாமல் அணிலின் கூட்டைக்கலைத்து, அந்த இடத்தை ஓரளவிற்கு சுத்தப்படுத்தி வீட்டையும் ஓரளவிற்கு ஒழுங்குபடுத்தினேன். ஆனால் அனைத்து உயிரினங்களும் எனது இந்த மாதிரியான நடவடிக்கைகளால்  பாதிப்படைந்து, அவற்றின் மனங்களும் குழம்பியிருக்கும்..!

 

இறுதியாக, இன்று செய்ய  நினைத்ததில், மழைவந்து, பாதிகூடச் செய்யமுடியவில்லை என்பது தான் உண்மை..!

இந்த உலகம் விசித்திரமானது..! நான் வாழ தீங்குசெய்யும் அனைத்தையும் அழிப்பது போல், நான் நல்லவன் ஆக அனைவரையும் கெட்டவன் ஆக்கவேண்டிய சூழலுக்குள் மாட்டவேண்டியுள்ளது..!

உலகில், அறிவே இல்லாமல் வாழுவது இலகு..!  ஆனால், அறிவு வர வர, வாழவே முடியாது என்பது தான் நிதர்சனம்..! அதற்கு தான் இறைவன் மரணத்தைப் பரிசளித்துள்ளான் போலும்..!

 

ஆ.கெ.கோகிலன்

21-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!