ரெய்டு..!

 



பொதுவாக விக்ரம் பிரபு நடித்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதற்கு காரணம் அவரது தாத்தா சிவாஜி மற்றும் தந்தை பிரபு..! இருவரது படங்களும் முன்பு  விரும்பிப்பார்ப்பது வழமை. இந்தியாவில் இருந்த காலத்தில் சிவாஜியின் படங்களை தேடித் தேடிப் பார்ப்பேன். எந்த சிறிய தியேட்டர் என்றாலும் அவரது நடிப்பிற்காகப் போவது என்பது என்னால் மாற்ற முடியாத ஒரு குணமாக முன்பு இருந்தது. எனது திருமண வருடத்தில் சிவாஜி இறந்துவிட்டார்..! அதன்பிறகு அவரது படங்கள் பார்ப்பது குறைந்துவிட்டது.

தற்போது வேறுபட்ட கதைக்களங்களில் நடிக்கும் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர். அந்த வகையில் இந்தப்படத்தைப் பார்த்தேன். ஆரம்பத்தில், வில்லன்களை எல்லாம் ஒரேயடியாகப் போட்டுத்தள்ளுவது போல் காட்சிகள் வந்தன. பின்னர் அவர்கள் திரும்ப  திரும்ப உயிருடன் வருவது போல் காட்சிகள் வந்தன..!

பிறகு தான் கதையே புரிந்தது..! அதற்கு இடையில் பிரதான வில்லனையும் கொன்றது போன்ற ஒரு காட்சி வந்தது. பின்னர் அது யாரோ ஒருவருடைய கனவு போல் அந்தக்காட்சி வந்தது. இவ்வாறு படத்தில் பல குழப்பங்கள் அடிக்கடி வந்தன. பின்னர் அந்தக்குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக, மறைய படம் பார்க்கலாம் என்ற நிலைக்கு வந்தது.

உண்மையில், காதலியையும்,  உறவினரையும் கொன்ற வில்லன்களைப் பழி தீர்ப்பதே கதை. அதற்குள் சில கதைகளையும் செருகிப்படத்தை மேலும் வலுவூட்ட முனைந்துள்ளார் இயக்குனர் கார்த்தி..!

ஆனால் அந்த அளவிற்கு வலுவானதாக படம் இருக்கவில்லை என்பது தான் உண்மை.  சிறிவித்யா, அனந்திகா மற்றும் ரிஷி ரித்விக் போன்றவர்களின் நடிப்பு பரவாயில்லை.  ஏனைய தொழில்நுட்பங்களும் அவ்வளவு ரசிக்கும் படி அமையவில்லை. வித்தியாசமாகக் கதை சொல்ல முயற்சித்தாலும் கதையில் புதுமையில்லை. ஹீரோ வெல்வதும் வில்லன் சாவதுமான வழமையான மசாலாப்படம் போல் இருப்பதே படம் எனக்குப் பிடிக்காததற்கு காரணம். கதாநாயகிகளை நன்றாகப்பயன்படுத்தி, நல்ல திரைக்கதையுடன் படத்தை   அமைத்திருந்தால், ரசித்திருக்கலாம். சாம் சி.எஸ்ஸின் ஒரு பாடல் மனதில் நின்றது. விக்ரம் பிரபுவை பிடிக்கும் என்றால் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.



 

ஆ.கெ.கோகிலன்

24-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!