அம்மா சொன்னது..!
திருவெம்பா என்றால் சிறுவயதில் அதிகாலை 4.00 மணிக்கு நித்திரையில்
இருந்து எழுந்து, வீதியில் பல இளைஞர்களுடன் சேர்ந்து, திருவெம்பாவை பாடல்கள் பாடிக்கொண்டு
ஊராட்களை நித்திரைவிட்டு எழுப்புவதும், அவர்களில் சிலர் தரும் தேநீர் மற்றும் சுவையான
வடை, சுண்டல் போன்ற ஏதாவது தின்பண்டங்களுமே தற்போது நினைவிற்கு வருகின்றது..! சிறுவயதில் அதிகம் கோயிலுக்குப் போனதாலோ என்னவோ
வளர்ந்த பிறகு அது மிகவும் குறைந்துவிட்டது..!
இன்று மாசியப்பிட்டியிலுள்ள கண்ணகை அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர்
ஆலயத்தில் எமது 7வது திருவெம்பா பூஜை நடந்தது. வழமையாக எனக்கு அடுத்த தம்பியே இந்த
விடயத்தில் ஞானம் உள்ளவர். கோயில் போய் அனைத்துக்கடமைகளையும் செய்வார். அம்மாவும் கூடச்செல்வார்.
இன்று ஞாயிறு என்பதால் எனக்கு விடுமுறை. அதனால் நானும் போகவேண்டிய சூழல் வந்தது. அம்மாவின்
80வது பிறந்த நாளை நேற்று இரவு ஓரளவிற்கு கொண்டாடினோம். அம்மாவிற்கு விருப்பமில்லை
என்றாலும் எனது வற்புறுத்தலுக்கு உடன்பட்டு, ஏற்றுக்கொண்டார்.
காலை 8.00 மணிக்கு அம்மாவையும், தம்பியின் மகனையும் ஏற்றிக்கொண்டு
கோயிலுக்கு வெளிக்கிட்டேன். தம்பி நான் வெளிக்கிட முதலே சைக்கிளில் போய்விட்டார். காலை 8.20 மணியளவில் நாமும் போய்ச்சேர்ந்தோம். ஆனால்
ஜயர் வரவில்லை. சிறிது நேரம் காத்திருக்க, ஜயரும், அவரது உதவியாளரும் வந்தார்கள். மழை வேறு சாதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. நாமும் உள்ளே
சென்று பூஜைகளில் கலந்துகொண்டோம். அப்போது, திருவெம்பாவைப் பாடலைப் பாட எனக்கும் சந்தர்ப்பம்
தந்தார்கள். ஏதோ பாடினேன். சிறுவயதில் பாடமாக இருந்த பாடல், இப்போது பார்த்து பாடவும்,
பல விடயங்கள் தடையாக இருக்கின்றன. பார்வை குறைந்துவிட்டது..! குரலும் அடைத்து கர கர
எனவந்துவிட்டது..! தமிழர் என்றாலும் தமிழை சரியாக வாசிப்பதில் சிரமம் இருக்கின்றது..!
பாடலின் சுருதி, தாளம், கமகம் என ஒன்றுமே தெரியாது..! இருந்தாலும் பண்டிதர் போல் பாடிய
நினைப்போடு இருந்தேன். அம்மாவும் நடக்க முடியாமல் வந்து, தடுதடுத்து ஒரு பாடலை மிகவும் சின்ன குரலில் பாடி முடித்தார்.
அவ்வளவு ஞாபகசக்தியுள்ள அம்மாவின் நிலையைப் பார்க்க கவலையாக இருந்தது. இடையில் என்னுடன்
கதைக்கும் போது அடுத்த வருடம் இருப்பேனோ என்றார்..! எனக்கு சுவாமி கும்பிடும் போது,
அதே வார்த்தை மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. எவ்வளவு கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து,
முதுமை வந்ததும், அதனாலும் கஷ்டப்படவேண்டிய நிலையில் இருப்பதை நினைக்க கண்களில் கண்ணீர்
வந்தது. நான் கண்ணீரைக்காட்ட விரும்புவதில்லை. இறைவனுக்கும் இயற்கைக்கும் அது தெரியும்.
அம்மம்மா 90 வயதைத் தாண்டித் தான் இறந்தவர். அம்மாவிடம் நீங்களும்
அம்மம்மாவை முந்த வேண்டும் என்றேன். தனக்கு அந்த ஆசையில்லை என்றார்..! அம்மா முன்பு
இப்படிக் கதைப்பதில்லை..! காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது.
ஜயரும் முன்பு தனித்தனிக் கோவிலுக்கு என்று தர்ப்பை போட்டு,
ஒரு கோவிலை முடித்துக்கொண்டு, அடுத்த கோவிலுக்குப் போவது வழக்கம். இரண்டு கோவிலிலும்
எமது பூஜை என்பதால் ஒரு கோவிலில் போட்ட தர்ப்பையை கழட்டாமல் அடுத்த கோயிலையும் முடித்துக்கொண்டு
கழட்டச்சொன்னார்.
ஜயருக்கும் நேரம் பொன்னாகத் தோன்றுகின்றது..!
இரண்டு கோயில் பூஜைகளும் முடிந்தவுடன் பிரசாதங்களைக் கொடுத்து, நாமும் உண்டுவிட்டு,
சண்டிலிப்பாய் பாதையூடாக வீட்டிற்கு வந்தோம். போகும் போது கந்தரோடைப் பாதையில் சென்றோம்.
ஆனால் வீதி படு மோசமாக இருப்பதால் காருக்கும், அம்மாவிற்கும் கூடாது என்பதால் மற்றைய
பாதையால் சுற்றி வீடு வந்தோம். இளம் வயதில்
சுற்றிய இடங்கள் எல்லாம் மாறியிருந்தன..! பல வீதிகள் எனக்கு மறந்து விட்டன..!
வீடு வந்த பின்னர் கொடுக்க வேண்டிய பிரசாதங்களைக் கொடுத்துவிட்டுத்
தொலைக்காட்சிப் பெட்டியில் அமர்ந்தது தான்.
சாப்பாட்டிற்கும், நித்திரைக்கும் தவிர அதே கதிரையில் பல மணிகள் உட்கார்ந்து,
காலே வலிக்கும் அளவிற்கு இருந்துவிட்டேன்..!
அளவிற்கு மிஞ்சினால்
அமுதமும் நஞ்சு என்பது போல் எது என்றாலும் ஒரு அளவு வேண்டும். தாண்டினால் வெறுக்கும்..!
ஆ.கெ.கோகிலன்
24-12-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக