இறுகப் பற்று..!
மனிதன் விலங்காக இருந்தபோது இருந்த நிம்மதியை, அறிவைப் பெற்றபோது
இழந்துவிட்டான்..! இங்கு அறிவு என்பது எமது கல்வித்திட்டங்களும், சமூகமும் வழங்கும்
அறிவைச் சொல்கின்றேன்.
உண்மையான அறிவு இருந்தால் வாழ்க்கை மிக இலகுவாக இருக்கும்.
ஒரு குடும்பத்தில் இருக்கும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்படும் சிக்கல்களுக்குக்
காரணம் இந்த அறிவுகளில் இருக்கும் வேறுபட்ட நிலைகள்..! இருவரும் ஒரே மொழியைப் பேசினாலும்,
புரிதல் ஏற்படாமைக்கு, அதைவிட இன்னும் முக்கியமான, உணர்வு ரீதியிலான புரிந்துணர்வில்
இருக்கும் குறைபாடே..!
மூன்று ஜோடிகளும், அவர்களுக்குள் ஏற்படும் சிக்கல்களும்,
அதற்கான தீர்வுகளும் என்று படம் ஒரு பாடமாக நகர்கின்றது..! எனக்கு இவ்வாறான பாடங்கள்
மிகவும் பிடிக்கும். இதற்காக தான் நான் அலைகின்றேன்..! எந்தப் பிரச்சனை என்றாலும் அதனை
நன்கு புரிந்து, அதற்கான தீர்வை வழங்க, சரியான வழிமுறைகளைப் பின்பற்ற, இந்த மாதிரியான
படங்களில் இருந்து கிடைக்கும் அறிவு உதவும்.
இந்தப்படத்தில் ஒரு பெரிய ஆச்சரியத்தை, இந்தக்கதை எனக்குள்
ஏற்படுத்தியுள்ளது..! எனது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களும் இந்தப்படத்திற்குள்
காட்சிகளாகவும், உணர்வுகளாகவும் அமைவதால், இன்றைய நாளில் எனது மனவுணர்வுகளுக்கு இப்படம்
பல விடைகளை வழங்கியுள்ளது..! விளைவாகக் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது..! மூக்கால்
நீர் ஒழுகியது..! உடலில் சிறு நடுக்கமும் ஏற்பட்டது..! எமக்கான உறவுகளை காக்கவும்,
பாதுகாக்கவும், பிள்ளைகளின் உணர்வுகளை மதிக்கவும், சண்டை சச்சரவுகள் வராமலிருக்க பிரயோகிக்கும்
நுட்பங்களும் ஒரு பாடமாகவே இதுவரை கருதியிருக்கின்றேன். அலுவலகத்திலும், வீட்டிலும்
ஆய்வே செய்துள்ளேன். உண்மையான கோபத்தைக் காட்டுவதில்லை. அதன் பின்விளைவுகளின் விபரீதத்தை
முதலே புரிந்ததால், அவ்வாறு செய்வது பலருக்கு குழப்பமாகவும், சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இது வீட்டிலும் நடந்துள்ளது. நான் உளவியல் என்று தனியாக எதுவும் படிக்கவில்லை. ஆனால்
கல்வியல் பட்டபின் டிப்ளோமா செய்யும் போது கல்வி சார்பான உளவியல் பற்றி சற்று அறிந்தேன்.
ஆனால் வாழ்க்கையில் பல மனப்பாதிப்பிற்கு உட்பட்ட நபர்களுடன் பழகவும், வாழவும் வேண்டிய
சூழலுக்குள் தள்ளப்பட்டேன். அதனால் உளவியலை வைத்தே, எனது வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றேன்.
அதற்கு ஒரு பின்னூட்டலாக இந்தப்படம் அமைந்துள்ளது. அனைத்து நடிகர்களும் உணர்ந்து நடித்துள்ளார்கள்..!
விக்ரம் பிரபுவிற்கு ஒரு வெற்றிப்படம். தொழில்நுட்பங்களும்,
பாடல்களும், அதன் வரிகளும் அற்புதம்.
ஆலோசனை செய்யும் ஆலோசகருக்கே ஆலோசனை எடுக்க வேண்டிய நிலைக்குப்
போவதே கதை..! யுவராஜ் தயாளன் என்ற இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆ.கெ.கோகிலன்
26-12-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக