நீயா..? நானா..?

 


அண்மைக்காலமாக ஒரு சினிமாக்குடும்பத்தை ஊடகவியலாளர்கள் பலர் குற்றம் சாட்டினார்கள்..! அதனூடாக தமது வாடிக்கையாளர்களையும் பெருக்கினார்கள்.

ஒரு  மின்னும் தொழிற்சாலையில் இருந்துகொண்டு, உண்மையாகவும்,  தவறான பழக்க வழங்களைத் தவிர்த்து, நேர்மையாக வாழ்வதற்கு கடுமையான மனவுறுதி வேண்டும்..!

பொய் சொல்வது என்பது மிக இலகு..! உண்மை சொல்லவேண்டும் என்றால் போராட வேண்டும்.

அதேபோல் தான் எப்படியும் வாழலாம் என்றால் இங்கு வாழ எந்தக்கஷ்டமும் இல்லை.

இப்படித்தான் வாழவேண்டும் என்றால் நிறையக்கஷ்டங்களை சந்தித்தே ஆகவேண்டும்.

இப்படியான இரண்டு நபர்கள் இணையும்போது மிகக்கவனமாக இருக்கவேண்டும். இரண்டுபேரும் விடுகின்ற தவறுகள் இறுதிவரை நீளுவதற்கு தன்மானமே தடையாக இருக்கும். சுயமரியாதை என்பது நல்லவர்கள் எல்லோருக்கும் இருக்கும்..!

நேர்மையானவர்கள் பொதுவாக அதிகம் பேசமாட்டார்கள். செயலில் திறமையைக் காட்டுவார்கள். குற்றமும் குறையும் சொல்லமாட்டார்கள். பொறுமையாக இருப்பார்கள். இறைபக்தி, இயற்கைமேல் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். அளவறிந்தே செலவு செய்வார்கள். சிக்கனமாகவே இருப்பார்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் உதவிகள் செய்வார்கள்.

 

சும்மா எதற்கு எடுத்தாலும் குறையும் குற்றமும் கண்டு, தாமும் நிம்மதியின்றி தவித்து, மற்றவர்களையும் தவிக்க வைத்து,  “பணம் சம்பாதிப்பது..” என்பது கஞ்சா விற்பதற்குச் சமம்.

இவை எல்லாம் அமீர்- ஞானவேல் (கார்த்தி) பிரச்சனைக்கு  பின்புலமாக இருக்கும் மனநிலைகள்.

ஒரு உற்பத்தி செய்வது என்றால் திட்டம் வேண்டும். ஒரு கலை என்றால் திட்டம் தேவையில்லை. முதலில்  கலையா..? உற்பத்தியா..? என்பதை இருவரும் தீர்மானிக்கவில்லை. ஒருவர் கலையாகப் பார்த்தார்..! இன்னொருவர் உற்பத்தியாகப் பார்த்தார்..!  கலையாகப் பார்த்தவர் வரும் இலாபத்தைப் பற்றிக்கதைக்கக்கூடாது. உற்பத்தியாகப் பார்த்தவர் அதிலுள்ள கலையைப்பற்றிக்கதைக்க முடியாது.

இங்கு மாறி நடப்பதே மக்களைக் குழப்புகின்றது..!

ஒரு வெற்றியை யாராலும் உறுதியாகச் சொல்லமுடியாது..!

சொல்லியடித்தார் என்றால் அவருக்கு காலம் சாதகமாக உள்ளது. தொடர்ந்து சொல்லியடித்தார் அடித்தார் என்றால் காலம் மிகச்சாதகமாக உள்ளது. சாகுவரை தொடர்ந்து சொல்லியடித்தார்  அடித்தார் என்றால் காலத்தைக் கவர்ந்தவர் அல்லது காலத்தை வென்றவர் என்று அர்த்தப்படுத்தலாம். இவ்வாறான நபர்கள் உலகில் மிகக்குறைவு.

வெற்றியும் தோல்வியும் வாழ்வில் சகஜம்..! அதை ஏற்கப்பழக வேண்டும்.

தொடர்ந்து உழைக்க வேண்டும். முன்னேற்றம் நிச்சயம் வந்தேயாகும்.

திறமையிருந்தும் உழைப்பு இல்லை என்றால் தோற்கவேண்டிய நிலையேற்படலாம்.

உழைப்பு இருந்து, திறமை இல்லை என்றாலும் தோற்காமல் தப்பிக்கலாம்.

இந்தப்பூமியில் யாரும், யாராலும் உருவாக்கப்படவும் முடியாது. அழிக்கவும் முடியாது..! அதை நாம் தீர்மானிக்க இயற்கை அனுமதிப்பதில்லை. மரணம் வரை பொறுத்திருந்தால் தான் சில முடிவுகளைச் சொல்ல முடியும்..! எம்ஜியாரும், சிவாஜியும் இரு பாதையில் சினிமாவில் பயணித்தவர்கள். இருவரையும் மக்கள் ரசித்தார்கள். ஒருவரை ஆள வைத்தார்கள்..! இன்னொருவரை ஆட (நடிக்க) வைத்தார்கள்.

ஆளுகை செய்தவரும் அடங்கினார். ஆடினவரும் அடங்கினார். இறுதியில் ஆளுகை செய்தவருக்கு, மக்களே பின்வாரிசானார்கள். ஆடினவர்க்கு பிள்ளைகளூடாகவே வாரிசு வந்தார்கள்..! இருவரும் காலத்தை வென்று இன்றுவரை நிற்கின்றார்கள்..!

இருவரையும் இயற்கை ஆசீர்வதித்துள்ளது..!

இந்தப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களும் அவ்வாறே பயணிக்க வேண்டும். சேறு அள்ளிப்பூசுவதால் பயனில்லை. மாறாகத் தமக்குப்பூசியதாகவே முடியும். வழக்கு முடியும் போது யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ  அது கிடைக்கும். 800 கோடி மக்களை ஒரு கோடி ஊடகவியலாளர்கள் ஒன்றுதிரட்டி தமக்கு ஏற்ப கொண்டுவர ஒருநாளும் முடியாது. இது தான் உண்மை..!

மாறாக நீதி “தராசு” போன்றது..! அங்கும் இங்கும் போய்க்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் உண்மை தீர்ப்பாக வெளிவரும். அதை அனைவரும் ஏற்க வேண்டும். அங்கும் இங்கும் ஏறியிறங்கும் நிலையில் கருத்துச்சொல்வது தீர்ப்பின் தரத்தையும், காலத்தையும் கேள்விக்குறியாக்கும்.

உண்மையான நேர்மையான மனிதர்கள் என்றால் இப்படியான நிலைவருவது சகஜமே..!

விட்டுக்கொடுத்து, அனுசரித்துப்போக ஒரு தரப்பு இருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும்.

காலம் சரியான பதிலைச் சொல்லும்.

நீதி தீர்ப்பாக நீதிமன்றம் மூலம் வெளிவரும். அதனை ஏற்று யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அவரவர் தொடர்ந்து தனித்தனியான அவர்களின் பாதையில் பயணிக்கலாம்.

“வெற்றி“ என்பது முயற்சியும் காலமும் சரியாக இருந்தால் தொடர்ந்துகொண்டே இருக்கும்..!

 

ஆ.கெ.கோகிலன்

08-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!