சரியான பாதை..?

 



தகவல் தொழில்நுட்ப மாணவர்களின் புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வை நடாத்த பல முறை துறைத்தலைவர் ஊடாக அனுமதி கேட்டார்கள். நாட்கள் பல காரணங்களால் தள்ளிப்போக 12-12-2023 ஆம் திகதி  நிறுவனத்திற்கு வெளியிலுள்ள  மண்டபத்தில் வைக்கக்கேட்டதால் அனுமதிக்கவேண்டிய நிலையேற்பட்டது. படிப்புக்கள் அடிபடும் என்றாலும் இவ்வாறான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்றாலும் பிள்ளைகளின் பிறதிறமைகள் கவனிக்காமல் விடுவதற்கான வாய்ப்பு உண்டு.

அந்தவகையில், நேற்றுக்காலை 9.30இற்கு விழா தொடங்க இருப்பதாக துறைத்தலைவர் எடுத்துக்கூறி, உடனே வரவும் கேட்டுக்கொண்டார்.

நானும், கணக்காளரும்,  உதவிப் பதில் பதிவாளரும் வழமையாக எமது நிறுவன வாகனத்தில் போவதை கௌரவமாகவும், எமது நிறுவனத்திற்கான ஒரு விளம்பரமாகவும் நோக்குவதால், ட்ரைவரிடம்  முதல் நாளே சொல்லியிருந்தேன். அவர் தனக்கு ஒரு செத்தவீடு இருப்பதாகக் கூறினார். நான், இரண்டையும் ஒருவாறு சமாளித்துச் செய்யவும் எனக்கூறினேன்.  அவர் அதற்கு சம்மதித்திருந்தார். இதன் காரணமாக நானும் எனது வாகனத்தைக் கொண்டுவரவில்லை.

நான் ஒரு ட்ரைவராக இருந்து, கணக்காளரையும், பதில் உதவிப் பதிவாளரையும் கூட்டிச்சென்றிருக்க முடியும். மேற்படி திட்டமிட்டதால், ஒன்றும் செய்ய முடியவில்லை.

இறுதியில் நேரம்  காலை 10.15ஐ நெருங்க, பொறியியல் துறை விரிவுரையாளரின் காரில் செல்லவேண்டி ஏற்பட்டது. காலை 9.30 இற்குப் பதிலாக 10.15இற்கு வந்தது எனக்கு சற்று மனக்கவலையாகவும் இருந்தது.  எமது ஊழியர் பொறுப்பை மறந்து செயற்படுவதை நினைக்கும் போது வேதனையாகவும், இனி அவ்வாறு நடந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நினைப்போடு நிகழ்வில் கலந்துகொண்டேன்.

நிகழ்வுகள் சிறப்பாக நடந்தது.  பிள்ளைகளும் தமது திறமைகளைக் காட்டினார்கள். நானும் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களைச் சொன்னேன். சில கருத்துக்கள் யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக சில நியாயங்களையும் கூறினேன். ஏற்றுக்கொண்டார்களா..? என்பதை சபையின் வெளிபாட்டில் இருந்து உணர்ந்து கொண்டேன். இருந்தாலும் சிலர், அதைத் தனக்குச் சொன்னதாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் நான் சுருக்கமாகவும் ஆங்கிலத்திலும் கதைக்கவே முதலில் திட்டமிட்டிருந்தேன். மதியச்சாப்பாட்டிற்கு நிறைய நேரம் இருந்ததால்,  மனதைத் திறந்து காட்டிவிட்டேன்.

பின்னர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, மதிய உணவையும் உண்டு, தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளரின் காரில் திரும்ப அலுவலகம் வந்தேன்.

இந்த நேரத்தில் ட்ரைவரின் SMS ஒன்று வந்திருந்தது. அதில் தவறுக்கு மன்னிப்பு கேட்கப்பட்டிருந்தது.

“சரி“ (OK) என்ற ஒரு பதிலோடு நிறுத்திவிட்டேன்.

பின்னர் மாலை வரை நிறைய வேலைகள் இருந்தன. அனைத்தையும் முடித்துக்கொண்டு, பாதுகாப்பு ஊழியர்கள் தொடர்பான பிரச்சனைக்கும் ஒரு வழியை வகுத்துக்கொண்டு, வீடுவந்து வழமையான வேலைகளில் ஈடுபட்டேன்.

இன்று, அலுவலகம் போகும் போதே கோப உணர்வு வந்தது..! யாரையும் கோபப்படுத்தக்கூடாது என்ற உறுதியை, மனதில் எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்தேன். வழமையாக முன்னால் இருக்கும் சாரதியைக் காணவில்லை..! அவரும் சங்கடப்படுகின்றார் என்பதை உணர்ந்து கொண்டேன். பல வேலைகள் இருந்தன..! ஒவ்வொன்றாகச் செய்துகொண்டிருக்க ட்ரைவரும் சங்கடத்துடன் இரவு நடந்ததை விளக்க, சூழ்நிலை புரிந்தது. யாரையும் கோபிப்பதால் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. மனங்களை மட்டுமே காயப்படுத்த முடியும்.  “மன்னிப்போம், மறப்போம்..” என்ற மனநிலைக்கு போக, காலை வரும்போது எடுத்த மனவுறுதி காரணமானது.

மாறாக கோபத்தைக் காட்டியிருந்தால், வேலையை விடும் எண்ணத்தில் இருக்கும்  அவரது முடிவுக்கு, மேலும் வலுச்சேர்த்திருக்கும்..!

எமது நிறுவனத்தைக்காக்க, பிள்ளைகள் இடை விலகுவதுபோல் ஊழியர்களும் விலகுவதை தடுக்க, தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  எல்லா நிலை ஊழியர்களும் ஓரளவு மனநிம்மதியுடன் வேலைசெய்யும் நிறுவனச்சூழலை கொண்டுவரவேண்டும்.

ஆனால் நிலமை, ஒவ்வொரு விடயத்தையும், இன்னோரு வில்லங்கக்கோணத்தில் பார்ப்பதால் நான் நினைப்பதும், சிலர் நினைப்பதும் வேறுபடுகின்றது..! இது பல முரண்பாடுகளை ஏற்படுத்தி, வேறு ஒரு நிலைக்கு அனைவரையும் கொண்டுசெல்கின்றது.

நான் சரியான திசையில் பயணிக்கின்றேன் என்ற நம்பிக்கையில் செல்கின்றேன்.  நினைத்தது  நடந்தால், பாதை சரி என்றும், தவறினால் சரியான பாதையை நோக்கிச் செல்லவேண்டியதே அனைவருக்கும் நன்மையானது என்பதையும் உணர்ந்துள்ளேன்.

 

ஆ.கெ.கோகிலன்

13-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!