பணிப்பாளர் நாயகத்தின் சங்கடம்..!

 



இன்று பதுளை பணிப்பாளர் எனக்கு போன் எடுத்து பணிப்பாளர் நாயகம் எடுத்த முடிவு தொடர்பாக “ஏதாவது குறையாக நினைக்கின்றீர்களா..?” எனக்கேட்டார். எனது நண்பர் என்ற வகையில் என்னுடன் அவர் கதைக்கச் சொன்னதாகவும் கூறினார். திருகோணமலைப் பணிப்பாளரின் சூழலைப் புரிந்துகொண்டு நடக்கக் கேட்டுக்கொண்டார். இவ்வாறாக நேற்று பணிப்பாளர் நாயகம் கேட்ட விடயத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக கதைத்தார். “நான் முன்பே சொல்லி விட்டேன்..” எனது நிலைப்பாட்டை..! பணிப்பாளர் நாயகம் எங்கு போகச்சொன்னாலும், அவருக்கு கீழ் வேலைசெய்யும் உத்தியோகஸ்தர் என்ற வகையில், அங்கு போவேன். என்னால் இயன்ற சேவையை அங்கு ஆற்றுவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும் எனக்குப் பிடித்த சில இடங்களையும் சொல்லியிருந்தேன். அவை தற்போது சாத்தியப்படாது என்பதைப் புரிய வைத்து, திருகோணமலையை ஏற்கச்சொன்னார். தரம்1, தரம் 2 என்று நிறுவனங்களைப் பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதனால் அவர் சொன்னதை எதிர்க்க எனக்கு எந்த வார்த்தைகளும் வரவில்லை. நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டேன். இதையே பதுளைப் பணிப்பாளருக்கும் சொன்னேன்.

மதியம் பணிப்பாளர் நாயகம் சில வாட்சப் மெசேஜ்களை அனுப்பியிருந்தார். நாவலப்பிட்டி மற்றும் பதுளைக்கு விரும்பினால் போகலாம் என்றார். மேலும் பதுளையில் ஒரு சிக்கல் இருக்கின்றது என்றும், விரும்பினால் பதுளை போகலாம் என்றும் சொன்னார்.

அங்கு இருக்கும் பணிப்பாளர் எனது நண்பர். அவருக்குச் சிக்கலைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை.  அதனால் நான் திருகோணமலைக்கே போகின்றேன் எனச்சொல்லிவிட்டேன்.

மேலும் குடும்பத்தையும், உறவுகளையும் தேற்றி, ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக்கொண்டுவந்துவிட்டேன். அது மாத்திரமன்றி, போவதற்கான ஏற்பாடுகளையும் செய்யத்தொடங்கிவிட்டேன்.

உண்மையைச் சொன்னால் நான் பணிப்பாளர் நாயகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு இக்கட்டான சூழலில் இருந்து என்னை மீட்க உதவியதாகவே பார்க்கின்றேன். அதற்கு, இறைவனும் இயற்கையும் உதவியதாகவே எண்ணுகின்றேன்.

நடப்பது எல்லாம் நன்மைக்கே..! என்று எடுத்துக்கொள்ளும் மனது பல வருடங்களுக்கு முன்பே எனக்கு வந்துவிட்டது..! ஆகவே இங்கு  நான் சொல்ல ஒன்றும் இருக்காது. இனி, அடுத்த வாழ்க்கைக்குத் தயாராக, முனைய வேண்டும்.

 

ஆ.கெ.கோகிலன்

26-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!