பல்லுக்கணக்கு..!

 



நேற்று, எமது நிறுவனத்தில் நடந்த உணவுத் திருவிழாவின் போது வாங்கிய, சில தின்பண்டங்களைத் உண்ணும்போது ஒரு பல்லு இலேசாக வலித்தது. இது போதாது என்று ஞாயிறு என்பதால்  மதியம் கோழி இறைச்சியும் சோறும் உணவாக வந்தது..! அதனைச் சாப்பிட பல்லின் நிலமை இன்னும் மோசமானது. மனைவி பிள்ளைகளுடன் இரவுச்சாப்பாடாக இறைச்சியையும் பிட்டையும் உண்ணும் போது சற்று சுவை குறைவாக இருப்பதுபோல் தோன்ற, அன்று வாங்கிய மாசிபோட்ட காய்ந்த கட்டசம்பலையும் சேர்த்து உண்ணும்போது, மாசித்துண்டு பல்லுக்குள் மாட்டி ஒரு பல்லையே ஆட வைத்துவிட்டது..!  இறைச்சி சாப்பிட்ட சுவையை விட பல்லு நோவால் பட்ட அவதி கூட..!  எனது நாக்கு எந்நேரமும் அந்தக் குறித்த பல்லையே தடவிக்கொண்டிருந்தது. இரவு முழுக்க அது தொடர்ந்தது.

இன்று காலையும் அதேமாதிரியே இருந்தது. பல்லைக் குறட்டால் பிடுங்கட்டா எனத்தோன்றியது. மகள் தடுத்துவிட்டாள். “நரம்புகள் பழுதாகிவிடும், டொக்டரிடம் காட்டுங்கள் அல்லது சற்றுப்பொறுமையாக நோவை சகித்துக்கொள்ளுங்கள் ” என்றாள். சரி என்று பொறுத்துக்கொண்டேன்.

இன்று நிறைய வேலைகள் இருந்தன. அனைத்தையும் இயன்றவரை முடிக்க நினைத்தேன். மழைவேறு இடையிடையே பெய்தும், வானம் இருட்டியும் ஒரு மந்தமான சூழலை ஏற்படுத்தி வைத்திருந்தது.

காலைச்சாப்பாடு உண்ணும் போதும் நோவால் அவதிப்பட்டேன். “கொட்டட்டா“ எனநினைத்தேன்..! பின்னர் எனது கொள்கை தடுக்க, ஒருவாறு கஷ்டப்பட்டு உணவை விரயப்படுத்தாமல் உண்டு முடித்தேன்.

அலுவலகம் போனதும் அனைத்து வேலைகளுக்குமான கட்டளைகளைக் கொடுத்துவிட்டு, யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குச் சென்றேன். போகும்போது வலி தாங்க முடியாமல் நல்லூரிலுள்ள ஒரு பல் மருத்துவநிலையத்திற்குச் சென்றேன். மருத்துவ நிலையம் திறந்து இருந்தது, ஆனால் அங்கே ஒருவரும் இல்லை. சரி வலியோடு கூப்பிட்டுப் பார்த்துவிட்டு, பல்கலைக்கழகம் சென்றேன்.

இன்று அங்கே “Marketing”  என்ற ஒரு சிறிய சஞ்சிகைபோன்ற  நூல் வெளியீடு நடந்தது. விசேட பிரதிகள் வாங்க, நிறுவனத்தலைவர் என்ற வகையில் என்னையும் அழைத்திருந்தார்கள். பல முறை அதற்கான நினைவுபடுத்தல்களையும் தந்தார்கள். அதனால் மறக்கவும் மறுக்கவும் முடியவில்லை.  நீண்ட நேரம் நிகழ்வு நடந்தது. சந்தைப்படுத்தலின் முக்கியத்துவம், நுண், சிறிய முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைகள் எனப்பல விடயங்களை உள்ளடக்கி ஒரு சிறிய கைநூல் வடிவில் வெளியிட்டு இருந்தார்கள். கோப்பி அருந்தும் போது படிக்கக்கூடிய நூல்.  அது தொடர்பான விமர்சனம், ஏற்புரை, மற்றும் மொழிபெயர்த்தவரின் உரை என சில மணிகள் உருண்டோடின. சில விடயங்கள் பயனுடையதாகத் தோன்றியது. அது, வழமையாக நான் சொல்லும், இலவசக்கல்வியால் நன்மைபெற்ற நாம், நாட்டுக்குத் திருப்பிச்செலுத்தவேண்டிய காலத்தில் உள்ளோம். அரசையும், அதிகாரிகளையும் குறை கூறுவதைவிடுத்து, இருப்பதைக்கொண்டு எம்மால் நாட்டுக்கு என்ன பயனைப் பெற்றுக்கொடுக்க முடியும் என சிந்தித்து செயற்படத் தூண்டுவதே இந்தப்புத்தகத்தின் அடிப்படை நோக்கம்..!

அந்த நேரத்தில் சிற்றூண்டி வந்தது. பல்லுநோவுடன், மெல்ல மெல்ல மற்றைய பக்க பற்களால் ஒருவாறு சாப்பிட்டு முடித்து, விசேட பிரதியையும் வாங்கிக்கொண்டு, தெரிந்தவர்களிடம் விடைபெற்றுத் திரும்பும் போது, அதே பல் மருத்துவ நிலையத்திற்குச் சென்றேன். ஒரு பெண் அமர்ந்திருந்தார். “பல் பிடுங்க  வேண்டும்..” டொக்டர் நிற்கின்றாரா..? எனக்கேட்டேன். மாலை 4.00இற்குபிறகு தான் வருவார். இப்பவே appointment ஐ எடுக்கச்சொன்னார்.  நான் வேண்டாம், போகும்போது பார்ப்போம் என்று சொல்லிவிட்டு அலுவலகம் சென்றேன்.  பணிப்பாளர் நாயகம் வருவதால் அவருக்குரிய தங்குமிட வசதிகளைப் பார்க்கச் சென்றேன். ஓரளவிற்குத் தரமாக இருந்தது. இந்தப் பொருளாதாரச் சூழலில் தனியாரிடம் சென்றால் கடும் செலவீனம் ஏற்படும் என்பதால் அரச நிறுவன தங்கும்விடுதியையே முற்பதிவு செய்துகொண்டேன்.

ஒரு சில அறிமுகங்களையும் ஏற்படுத்திவிட்டு வந்தேன்.

பின்னர் சில வேலைகள் இருந்தன. அவற்றைச் செய்துவிட்டு, மதிய உணவான பிட்டை உண்ண வெளிக்கிட  பல் கொதித்தது. கொட்ட மனமில்லாமல் மெல்ல மெல்ல உண்டு முடித்தேன். பல்லுவலியும் அதிகமாகி வந்தது..! அந்நேரம்  இலங்கை சுதந்திரக்கட்சி பிரமுகர் மற்றும் அவரது முகாமையாளர் என இருவர் வந்தார்கள். ஏறக்குறைய  4 வருடங்களுக்கு மேலாக அவர்களுடனான தொடர்புகள் குறைந்து இருந்தன.

எமது நிறுவனக்காணிப்பிரச்சனையின் தீர்வுக்கான முதல் அடியை வைக்க, அந்நேர மாகாண ஆளுனரை அறிமுகப்படுத்தி,  அவரூடாக காணியின் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு கதைத்து, பின்னர் இருசாராரும், யாழ் மாவட்ட செயலாளரும் இணைந்து ஒரு சில மாற்றுத்திட்டங்களூடாக ஒரு இணக்க நிலையை எட்டினோம். அதன் விளைவே, தற்போது காணிப்பிரச்சனை முற்றாக முடிந்துள்ளது. எனவே அதற்குப் பிள்ளையார் சுழிபோடக்காரணமான நபர்களை மறக்க முடியாது.

அதற்கான நன்றியை கூறியதுடன், இனி கட்டடம் கட்டுவதற்கு ஏற்ற வசதிவாய்ப்புக்கள் இருந்தால் உதவும் படியும் கூறி, அவர்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்சேர்ப்புகளுக்கும்  உதவி, அவர்களின் ஒத்துழைப்பையும் கேட்டு அனுப்பி வைத்தேன்.

அவர்களுடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது, பல் வலி கூடியது. கையால் அந்தபல்லை தொட்டு உள்ளே தள்ளியும், வெளியே இழுத்தும் ஏதோ செய்துகொண்டிருந்தேன். அவர்கள் பல விடயங்களைக் கதைத்தார்கள். நாட்டின் ஜனாதிபதி மாற்றங்களின் போது நடந்த விடயங்களைக் கூறினார்கள்..! மோடி அரசாங்கம், தமிழக அரசு என்பவற்றுடனான தொடர்புகளைக் கூறினார்கள்.  எமக்கு எவ்வாறு உதவமுடியும் என்பது பற்றிச் சொன்னார்கள். தனது குடும்ப வாழ்க்கை, மனைவி பிரிவு, தாய் இறப்பு, மருத்துவருடனான முரண்பாடு எனப்பலவற்றைச் சொன்னார்கள். அத்துடன் 8 நாட்கள் சிறை சென்ற விடயத்தையும் சொன்னார்கள்..!

மனிதர்கள் கடவுள்கள் அல்ல..! தவறுகள் நடந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் மேலும் தவறுகள் செய்வதால் சிக்கலுக்குள் மாட்டுவது நாம் தான்..!

 

ஒரு வித வெறுப்புணர்ச்சி, வலி போன்ற பல உணர்ச்சிகள் முகத்தில் வந்துசென்றன..! அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பல்லு கையோடு வந்துவிட்டது..!

ஒருவாறு அதனைக்கால்சாட்டை பைக்குள் வைத்துவிட்டு, அவர்களின் கதைகளுடன் ஜக்கியமானேன்.

சில நாட்களுக்கு முன்னர் மகளும், பல்லு வலித்ததால் டொக்டரிடம் சென்று பல்லைப் பிடுங்கியுள்ளார். அதற்கு கூலியாக ரூபா.1000 ஐ வைத்தியர் பெற்றுள்ளார். காலை இருமுறை டொக்டரிடம் சென்றேன். சந்திக்கமுடியவில்லை. மாலை தானே விழுந்துவிட்டது..! குறைந்தது ரூபா.1000 மிச்சம்..!

எனக்கு இதுவரை 28 பற்கள் மாத்திரமே முளைத்துள்ளன..! 4 பற்கள் முளைக்கவில்லை..! மனைவிக்கு 36 பற்றகள் முளைத்துள்ளன..! அதில் பல தெத்திப்பற்கள்..!  அவருக்குப் பல பற்கள் முதலே விழுந்துள்ளன..! இருந்தாலும் என்னைவிட அவருக்கு பற்கள் அதிகம்.

இறைவன் எப்போதும் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் சமப்படுத்துகின்றான்..!  எங்கள் இருவரது பற்களையும் சேர்த்து இரண்டால் பிரித்தால் சாதாரண மனிதர்களின் பற்களின் எண்ணிக்கை வரும்..! இது தான் “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன..” என்கின்றோம்..!

                               

ஆ.கெ.கோகிலன்

11-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!